பேப்பர் பையன்கள்


செய்தித்தாள் வாசிப்பது ஏதோ பட்டிக்காட்டுத்தனம் அல்லது போன நூற்றாண்டுப் பழக்கம் போல் ஆகிவிட்டது. ட்விட்டர், யூ ட்யூப், News Feeds வகையறாக்கள் தொலைக்காட்சியயையே தூக்கி சாப்பிடும் காலத்தில் செய்தித்தாள் ஓலைச் சுவடி போன்ற வஸ்துவாகிக் கொண்டிருக்கிறது.

இருப்பினும் செய்தித்தாள் படிப்போர் இருக்கத்தான் செய்கிறோம்.

நாம் ‘சூடாகப்’ படிக்கும் செய்தித்தாளின் அச்சு வேலைக்குப் பிறகு பல நச்சு வேலைகளைத் தாண்டியே நம்மை வந்தடைகின்றது. இறுதியில் பெரும்பாலும் யாரோ ஒரு பெயரறியாத செய்திகள் - நம் வாசற்படியில்....சிறுவன் நம் வீடுகளுக்குள் இன்றைய செய்திகளைத் தூக்கி வீசிச் செல்கிறான். யார் இந்த பையன்?

பேப்பர் பையன்கள் தனியொரு இனம் என்று தான் சொல்ல வேண்டும். வெயிலோ மழையோ, இவர்கள் வந்து போனதை வாசலில் இருக்கும் வாசனை போகாத புத்தம் புதிய செய்தித்தாள் சொல்லும்.

 அண்மையில் ஜெபிரி பாக்ஸ் (Jeffrey Fox) என்பவர் எழுதிய “Rain: What a Paperboy Learned About Business” என்ற நூலைப் படித்தேன். அதில் இவர் பேப்பர் பையன்களின் வாழ்கை மற்றும் அவர்களின் அணுகுமுறையை மையமாக வைத்து எப்படி ஒருவர் தான் செய்யும் எந்த ஒரு தொழிலிலும் வெற்றி காண முடியும் என்பதை விவரிக்கிறார்.

இந்நூலில் சாதாரண பேப்பர் பையனாக இருந்து வாழ்வில் முன்னேறியவர்களின் ஒரு பெரிய பட்டியலைத் தந்திருக்கிறார். இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள பிரபலங்கள் – பல அறிவியல் கதைகளை எழுதிய இசாக் அசிமோவ், பெரும் தொழிலதிபர் வாரன் பஃபெட், ஹாலிவுட் நடிகர் டோம் க்ரூஸ், கண்டுபிடிப்பாளர் எடிசன், மார்ட்டின் லூதர் கிங், மற்றும் பலர். இதைப் படித்தவுடன் எனக்கு நமது பாரத ரத்னா அப்துல் கலாம் நினைவுக்கு வந்தார்.

ஒரு காலத்தில் பேப்பர் பையனாக இருந்தவர்களை வேலைக்கு அமர்த்தினால் நல்ல பலன் கிடைக்கும் என்றும் கூட ஆலோசனை வழங்குகிறார் ஜெபிரி பாக்ஸ்!

இவர்கள் மிகுந்த பொறுமை உடையவர்களாக, கடமை உணர்ச்சியும் வாழ்வில் முன்னேற வேண்டும் என்ற தீராத ஆவல் உள்ளவர்களாகவும் இருப்பார்கள் என்று தன்னுடைய இந்த கருத்துக்கு வலு சேர்க்கிறார்.

எனக்கும் இது சரியென்றே தோன்றுகிறது. சிறு வயதில் பேப்பர் பையனாகப் பணியாற்றியவர்கள் அந்த அனுபவத்தையும் தங்களது CV-இல் சேர்த்துக் கொள்வதில் தவறேதும் இல்லை. இதற்கு நாம் வெட்கப்பட வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால் இது நாம் பெருமைப் பட வேண்டிய ஒன்று.

ஆங்கில மோகம்


பலசரக்கு அங்காடியில் நுழைகிறேன். ஆடம்பரத் தம்பதியர் தம் குழந்தையின் ஆங்கில மய மழலையில் பெருமிதம் கொள்கின்றனர். அம்புலிமாமா படித்த காலம் போய் ஹாரி போட்டெர் காலம் வந்து விட்டது.

கலப்பு

கலப்பு

ஒரு நல்ல தமிழ் எழுத்தாளர் பெயர் சொல்லேன் என்று இன்றைய இளைஞனைக் கேட்டால் பெரும்பாலும் மௌனமோ அல்லது ஏளனமோ தான் உங்களுக்கு பதிலாகக் கிடைக்கும். காசு கொடுக்கும் கணிப்பொறி மொழிகளை விடுத்து கனித்தமிழ் படிக்க நேரமில்லை.

பெயர்கள், பெயர்பலகைகள், அன்றாட உரையாடல்கள் என்று அனைத்திலும் ஆங்கிலக் கலப்பு, திணிப்பு, அல்லது மிதப்பு. வானொலி மற்றும் தொலைகாட்சி அறிவிப்பாளர்களின் தமிழ் மொழிப் படுகொலையின் உச்ச கட்டம். ஒரு நிமிடம் தடையின்றி தமிழ் பேசினாலே தங்கம் தரும் அளவுக்குத் தமிழ் வளர்ந்து விட்டது.

எல்லாவற்றுக்கும் மேலாக தமிழ்த் திரை படங்களுக்குத் தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும். பாடல்கள் எப்படி இருந்தாலும் பரவாயில்லை. தமிழ் பத்திரிகைகள் தங்களால் முடிந்த வரைக்கும் தமிழைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன. சில பத்திரிகைகள் மட்டும் நல்ல தமிழை நம்பி போராடிக் கொண்டிருக்கின்றன.

நல்ல தமிழ் கேட்க யாழ்பாணம் அல்லது மலேசியா செல்ல வேண்டியுள்ளது. வாழ்க தமிழ்.