மருந்து இருக்கிறதா?


             
கதவு திறந்ததும்
கட்டித் தழுவிட
ஓடோடி வருகிறாய்.
 
சட்டென விலகிக் கொள்கிறேன்.
உன் அம்மா
உனை வாரிச் செல்கிறாள்.
 
நிம்மதிப் பெருமூச்சுடன்
நழுவுகிறேன் 
குளிப்பதற்கு.
 
தேய்க்கிறேன் கழுவுகிறேன்
தேய்க்கிறேன் கழுவுகிறேன்
 
இன்னும் கொஞ்சம் சுடுநீர்
இன்னும் கொஞ்சம் சோப்பு
 
விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
எங்கேயும் இருக்கலாம் கிருமி.
 
சிலரைக் குணமாக்கி
வீட்டுக்கு அனுப்பினேன்.
ஒருசில உயிர்களை
இப்போதைக்கு இருக்கச் செய்தேன்
 
என்ன செய்தும்
மற்றவர்கள் மரித்துப் போனார்கள்.
 
இந்த இருப்புகளில் விருப்பும் இல்லை
இறப்புகளில் வெறுப்பும் இல்லை.
 
தேய்க்கிறேன் கழுவுகிறேன்
தேய்க்கிறேன் கழுவுகிறேன்
 
இன்னும் கொஞ்சம் சுடுநீர்
இன்னும் கொஞ்சம் சோப்பு
 
விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
எங்கேயும் இருக்கலாம் கிருமி.
 
இன்று வரைந்த ஓவியம்
காகிதப் பூ கத்திக் கப்பல்
சேலைகட்டி எடுத்த படம்
எல்லாமும் காட்டி
 
அப்பாவைக் கொஞ்ச வேண்டும்
எப்போது வருவாரென்று
 
தூக்கத்தைத் தூரப்போட்டு
காத்திருக்கும் என்னுயிரே
 
புன்னகைப் பூ உன்னைவிட
பெரியதெந்த செல்வமடி?
 
ஓடி வா என் மகளே
முத்தமழை பொழிய வந்தேன்.
 
விரல் இடுக்கில்
நகக்கண்ணில்
உதட்டோரம்
இன்னும் இருக்கலாம் கிருமி.
 
கட்டித் தழுவிட
ஓடோடி வருகிறாய்.
 
சட்டென விலகிக் கொள்கிறேன்.
 
“தூங்கப் போ” என்று அதட்டிவிட்டு
இதயத்தைச் சாத்தி வைக்கிறேன்.
 
இழந்த இன்பங்களுக்கு
எங்கேயாவது
மருந்து இருக்கிறதா?

கொரோனா குறள்கள்


வள்ளுவரிடமிருந்து ஓலையொன்று வந்திருக்கிறது. அவர் தந்த அதிகாரம்:

கொரோனா களைதல்

1. கைகளைக் கழுவுக கசடற கழுவாக்கால்
கைகழுவிச் செல்லும் உலகு
2. தொடுமுறை தவிர்த்து வணக்கம் உரைப்போர்
விடுமுறை விடுவார் நோய்க்கு
3. நுண்ணுயிர்க் கிருமி பேராயுதம் போலே
மண்ணுயிர்க் கழிவைத் தரும்
4. பெற்றவர் பிறந்தவர் உற்றவர் ஆகினும்
சற்றவர் தூரம் நன்று
5. வீட்டிலும் தெருவிலும் ஊரிலும் தூய்மை
நாட்டிலும் நோய் நீக்கும்
6. தும்மலும் சளியும் வருகையில் வேண்டும்
நம்மிடம் கைக் குட்டை
7. காய்ச்சல் இருமல் மூச்சுத் திணறல்
நோய்த் தொற்று அறிகுறியாம்
8. வதந்தியும் பதற்றமும் நோயினும் விரைவில்
சுதந்திரம் பறித்து விடும்
9. மருத்துவர் செவிலியர் துப்புர வாளர்
திருத்தொழில் போற்றிடு வோம்
10. ஒன்றென யாவரும் உழைத்திட நோயை
வென்றிட லாம் வாரீர்