ஃபேஸ்புக்… க்ளிக்.. க்ளிக்…


ஃபேஸ்புக் என்றொரு விந்தை 

மக்கள் தொகையில் முதல் இரண்டு நாடுகளை நாம் அறிவோம். மூன்றாம் இடத்தில எந்த நாடு உள்ளது?  ஏறக்குறைய 310 மில்லியன் மக்களைக் கொண்ட அமெரிக்காவுக்கு மூன்றாம் இடம். 

ஃபேஸ்புக் மட்டும் ஒரு நாடாக இருந்தால் மக்கள் தொகையில் மூன்றாவது இடத்தை இந்நேரம் பிடித்திருக்கும். ஆம், இன்றைய அளவில் ஃபேஸ்புக் பயனர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை 500 மில்லியன். 

மக்கள் வெள்ளம்

 

2004 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்ட ஃபேஸ்புக் கடந்த 6 மாதங்களில் மட்டும் சுமார் 100 மில்லியன் உறுப்பினர்களை தன் வசம் ஈர்த்துள்ளது. கிராமத்தில் வதந்தி பரவுவது போல் ஒரு வேகம். 

இதில் அப்படி என்னதான் மக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள்? 

ஒவ்வொருவரும் தங்களது விருப்பு, வெறுப்பு, அவர்களின் அன்றாட நிகழ்வுகள், அரசியல் சார்பு அல்லது சார்பின்மை, என்று பல விஷயங்களைப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். 

விட்டலாச்சார்யா படத்தில் வரும் மாயக் கண்ணாடியின் இன்றைய வடிவம் என்றே இதனை சொல்லலாம். 

என் ஃபேஸ்புக் நண்பர்களில் சிலர் புகைப் படங்களாகப் போட்டுத் தள்ளுகிறார்கள். சிலர் திங்கள் கிழமையே எப்போது வெள்ளிக் கிழமை வரும் என்று கேட்கிறார்கள். சிலர் தாங்கள் ரசித்த வீடியோ காட்சிகளைப் பதிவேற்றம் செய்கிறார்கள். 

ராசி பலன் பார்ப்பவர்களும் உண்டு. ஒரு சிலர் 50 வயதாகியும் FarmVille விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். 

நிஜ வாழ்க்கையில் நீங்கள் செய்ய முடியாத பல விஷயங்களை ஃபேஸ்புக்கில் செய்யலாம். அவை: 

 • பிறர் சுவற்றில் எழுதி விட்டு “It is the writing on the wall” என்று ஓடி விடுவது (முதுகு பழுத்து விடாது?)
 • யாரும் பார்க்காத நேரத்தில் ஒருவரைக் கிள்ளி வைப்பது
 • “நான் தண்ணீரே குடிப்பதில்லை – அதில் மீன்கள் உடலுறவு கொள்வதால்” என்பன போன்ற தத்துவங்களை உதிர்ப்பது (ஊரை விட்டே தள்ளி வைத்து விடுவார் நாட்டாமை)
 • ஒரு டப்பாவில் life box என்று எழுதி வைத்துக் கொண்டு பார்ப்பவரிடம் எல்லாம் “இதுல என்ன இருக்குனு பாரேன்” என்று சொல்வது
 • அலுவலக நேரத்தில் பாயிண்ட் வைத்து mafia கும்பலை அழிப்பது
 • மற்றும் பல

ஆனால் ஃபேஸ்புக்கில் பல நன்மைகள் இருக்கத் தான் செய்கின்றன: 

 • ஒரு ஊருக்கு/நாட்டுக்குப் போகும் முன்பாகவே அந்த இடத்தைப் பற்றிய விஷயங்களை சேகரிக்கலாம்
 • புத்தக விமர்சனம் செய்யலாம்/படிக்கலாம் (புத்தகம் படிக்கா விட்டால் என்ன?)
 • பழைய பள்ளி நண்பர்களைத் தேடிக் கண்டுபிடித்து “டேய் ராமசாமி, நீ இங்கயா இருக்க? சொல்லவே இல்ல…” என்று அளவளாவிக் கொள்ளலாம்
 • கல்வி நிறுவனங்கள் பற்றி சக மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம் (“மச்சி, ஃபிகர் எல்லாம் தேறுமா?”)
 • “மின்சாரத்தை மிச்சப் படுத்துவோம்”, “கார்பன் டை ஆக்சைடு அளவைக் குறைப்போம்” என்பது போன்ற இயக்கங்களில் சேர்ந்து நம்மால் முடிந்த வரையில் குரல் கொடுக்கலாம்
 • புதிய இடுகைகளை (blogs) நண்பர்களுக்குத் தெரியப் படுத்தலாம் (இந்த இடுகையை முடித்து நான் submit பொத்தானை அழுத்தியதும் தானாகவே ஃபேஸ்புக்கில் “எலேய், நம்ம பய புள்ள புது ப்லாக் எழுதிருக்குலே” என்று அறிவிக்கப் படும்)
 • எல்லாவற்றுக்கும் மேலாக விளம்பரம் செய்து கொள்ளலாம். நண்பரின் நண்பர் நமக்கும் நண்பர் என்பது தான் இங்கு விதி.

ஃபேஸ்புக்கில் என்னைக் கவர்ந்த நண்பர்களில் Alfy முக்கியமானவர். அதிக புகைப் படங்களை ஏற்றிய சாதனை விருதினை இவர் நிச்சயம் பெறுவார். Alfyயிடம் எனக்குப் பிடித்த விஷயம் எல்லா கருத்துகளுக்கும் பதில் அளிப்பதும் பிறர் கிண்டல் செய்தாலும் தனக்குப் பிடித்ததை செய்யும் தன்மையும் தான். 

ஃபேஸ்புக் அடிமைகள்
ஆனால் பல இளைஞர்கள் ஃபேஸ்புக் அடிமைகளாக மாறி (பச்சை மண்ணு?) மனோதத்துவ நிபுணர்களை நாடிச் செல்லும் நிலைக்கு வந்து விடுகின்றனர்.  நிஜ உலகத்தை விட இந்த உலகம் அழகானதாக, எளிதானதாக இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். அமர்ந்த இடத்தில் இருந்தே அனைவருடனும் இணைந்து இருப்பது பெரிய விஷயம் தானே? பிடிக்காத மனிதர்களை ஒரு பட்டனை அமுக்கி காணமல் போகும் படி செய்யும் வசதி வேறெங்கு கிடைக்கும்?

சமூக வலை தளங்களில் அடுத்த புரட்சி வரும் வரை ஃபேஸ்புக் ஆதிக்கம் தான்.